கெடா
மாநிலத்தின் உயர்ந்த மலையில்
சுங்கை
புந்தார் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும்
மலேசிய நாட்டின் 58ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தைச் சுங்கை
புந்தார் தமிழ்ப்பள்ளியின் ஒட்டு மொத்த மக்களும் வித்தியாசமாகவும் ஒரு சவாலாகவும்
எடுத்துக் கொண்டுள்ளனர்.
இதுவரை எவரும் செய்திராத புதியச் சாதனை ஒன்றைப் படைக்க உறுதி
பூண்டுள்ளனர். இதற்காகப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் அத்தனை பேரும்
அன்றாடம் கடுமையான பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த அரிய திட்டத்திற்கு ‘விண்ணையும்
தொடுவோம் என்று வீரமுழக்கமிடும் வாசகத்தைத் தலைப்பாக வைத்துள்ளனர்.
2015 ஆகஸ்ட் 16 தொடங்கி 16 செப்டம்பர் வரை கொண்டாடப்படும்
மெர்டேக்கா விழாவை இப்பள்ளியும் பல சிறப்பு நிகழ்ச்சிகளுடன் விமரிசையாகக் கொண்டாடி
வருகின்றது.
பல வண்ணக் கொடிகளால் அலங்காரம். அதிலும் மாணவர்களே தங்கள்
கையால் வரைந்த கொடிகளால் பள்ளி வளாகம் முழுவதும் அலங்கரித்து உள்ளது காண்பதற்குக்
கண்களைக் கவரும் வகையில் உள்ளது.
கூடுதல் சிறப்பாகப் பள்ளி மாணவர்கள் தங்கள் மிதிவண்டிகளை
மலேசிய, கெடா மாநிலக் கொடிகளாலும் பல வண்ண தாட்களாலும் அலங்கரித்து தாங்கள்
குடியிருக்கும் சுங்கை புந்தார் தோட்டத்தை வலம் வந்த காட்சி அங்குக் கூடியிருந்த
மக்களை வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது.
அத்துடன் வழியில் சந்திக்கும் சிறியவர் பெரியவர் அனைவருக்கும்
சுதந்திர தின வாழ்த்துகளைச் சொல்லி மலேசியக் கொடியைக் கொடுத்த நிகழ்ச்சி
மகிழ்வூட்டுவதாக இருந்தது.
தோட்ட நிர்வாகி திரு. வான் ஆ பா, கடைக்காரர்கள்
திரு.கோவிந்தராஜு, திரு.மனோகரன் ஆகியோர் அனைவருக்கும் உணவுப் பொட்டலங்களை வழங்கித்
தங்கள் பங்களிப்பை உற்சாகத்துடன் தெரிவித்துக் கொண்டனர்.
மாணவர்கள் அனைவரும் தொடர்ந்து வண்ணம் தீட்டும் போட்டியில்
கலந்து கொண்டு தங்கள் திறனை வெளிப்படுத்தினர். அழகிய மிதிவண்டி அலங்காரத்துக்கும், வண்ணம்
தீட்டுதலுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
எது எப்படி ஆயினும் விண்ணைத் தொடுவோம் எனும் சாகச நிகழ்ச்சியே
தங்களின் உச்சக்கட்ட நிகழ்ச்சி எனத் தலைமை ஆசிரியர் திரு.மா. அம்பிகாபதி கூறினார்.
திங்கள் செப்டம்பர் 14, 2015 04:54 PM
http://www.thaimoli.com/news-detail.php?nwsId=10717
No comments:
Post a Comment